ஐ.மு.கூட்டணி அரசுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டதால் இடதுசாரிகளின் மீது தனக்கு எந்தவிதமான கசப்புணர்வும் இல்லை என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் உறவு வைத்துக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க நான் ஒன்றும் அரசியல் ஜோதிடர் அல்ல என்றார் பிரணாப் முகர்ஜி.
"கடந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான கருத்து வேறுபாடுகளையும் பன்முகப் பார்வைகளையும் மத்திய அரசு சமாளித்துள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை நான் கவலைப்படுகிறேனே தவிர, கசப்புணர்வு எதுவும் எனக்கில்லை" என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
"நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். இடதுசாரிகளின் மீது எனக்கு எந்தக் கசப்புணர்வும் இல்லை. அவர்களும் என்னை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதில்லை" என்று பிரணாப் கூறினார்.
அடுத்த தேர்தலில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, "அதுபற்றி இப்போது எப்படி நான் கூற முடியும். சிறிது காத்திருந்தால் சூழ்நிலைகள் பதில் சொல்லும். எதையும் கணித்துக் கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல" என்றார் அவர்.