சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஆறாவது பாதையைத் தவிர்த்து ஏன் நிறைவேற்றக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பரிசீலித்து 29 ஆம் தேதி பதில் கூறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமேன், உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், ஜூலை 29 ஆம் தேதி தனது நிலையை அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றும் கூறினார்.
இவ்வழக்குகளை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜெ.எம். பாஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்துகையில், நம்பிக்கையைக் காயப்படுத்தாமலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமலும் இரண்டிற்கும் தகுந்தாற்போல நடந்துகொள்ள வேண்டும் என்று அரசிற்கு ஆலோசனை வழங்கியது.
மேலும், "ரூ.2,500 கோடி மதிப்புள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக பல்வேறு அரசுகள் 19 வல்லுநர் குழுக்களை அமைத்துள்ளன. இதில் 18 குழுக்கள், மாற்றுப்பாதை இருப்பதாக அறிக்கை வழங்கியுள்ள நிலையில், ஒரு குழு மட்டுமே ராமர் பாலத்தை இடித்து செயல்படுத்தக் கூடிய ஆறாவது வழித்தடத்தை பரிந்துரைத்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியது.
வழக்கறிஞர் நாரிமேன் தனது வாதத்தில், கம்பன் எழுதியுள்ள ராமாயணத்தின்படி தனது மனைவி சீதையைக் காப்பாற்றுவதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு ராமன் கட்டிய பாலத்தை, ராவணனைக் கொன்று சீதையை மீட்டு வரும்போது ராமனே இடித்து விட்டார். எனவே குறிப்பிட்ட இடத்தில் எந்தப் பாலமும் இல்லை என்பதால் அரசு பாலம் எதையும் இடிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் 35 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள ராமர் பாலத்தில் 300 மீட்டரை மட்டுமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக அரசு இடிக்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.