நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்.பி.க்கள் ராம் ஸ்வரூப் பிரசாத், பி.பி.கோயா ஆகியோர் இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தலைமையில் நடந்த அவசர நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"கட்சிக்கு எதிராகச் செயல்பட்டுள்ள எம்.பி.க்கள் இருவரும் உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர்" என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலர் ஜாவெத் ரஷா தெரிவித்தார்.
பீகார் மாநிலம் நாளந்தா தொகுதியைச் சேர்ந்த எம்.பி. ராம் ஸ்வரூப் பிரசாத் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு அதரவாக வாக்களித்தார். லட்சத்தீவைச் சேர்ந்த எம்.பி.கோயா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.