கட்சியின் உத்தரவுப்படி மக்களவைத் தலைவர் பதவியை விட்டு விலகுவதற்கு மறுத்த காரணத்தால், சோம்நாத் சட்டர்ஜியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜியைக் கட்சியை விட்டு நீக்கியுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்பதுடன், இந்த நடவடிக்கை மகிழ்ச்சி தரத்தக்கது அல்ல என்றும் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
"மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்ற பிறகு, கட்சியின் எம்.பி. யாரும் மக்களவைத் தலைவர் பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்தது. இந்த முடிவு சோம்நாத் சட்டர்ஜியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எங்களுக்கும் வேறு வழியில்லை" என்றார் அவர்.