'மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் நடத்திய லஞ்ச நாடகம் ஒரு அரசியல் பயங்கரவாதம். ஜனநாயகத்தின் கோவிலை அவமதிக்கும் செயல்" என்று காங்கிரஸ் குற்றம்சாற்றியுள்ளது.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறி, மக்களவையின் மையத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், "மக்களவைக்குள் ரகசியமாக பணத்தை கொண்டு வந்ததன் மூலம், ஜனநாயகத்தின் கோவிலை பா.ஜ.க. வினர் அவமதித்து விட்டனர். பா.ஜ.க. வினரின் லஞ்ச நாடகம் ஒரு அரசியல் பயங்கரவாதம். நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அழிக்கும் திட்டத்துடன் இது அரங்கேற்றப்பட்டுள்ளது" என்று குற்றம்சாற்றியுள்ளார்.