Publish Date: Wed, 23 Jul 2008 (16:22 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (16:21 IST)
மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசிற்கு ஆதரவாக் கட்சி மாறி வாக்களித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் டி.கே. ஆதிகேசவலு நாயுடு, எம். ஜெகன்நாதம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
மக்களவையில் 5 எம்.பி.க்களைக் கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி நேற்றிரவு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றபோது, அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கட்சி மாறி அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதுபற்றி அக்கட்சியின் தலைவர் யெரான் நாயுடுவிடம் கேட்டதற்கு, "இது ஒரு நம்பிக்கை மோசடி, துரோகம். தவறிழைத்த எம்.பி.க்களின் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதேபோல, கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அக்கட்சித் தலைவரும், ஒரிசா முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக 13 எம்.பி. க்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
பா.ஜ.க.வினர் 7 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் 2 பேர், தெலுங்கு தேசம் கட்சியினர் 2 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் ஆகிய 13 எம்.பி.க்களும் கட்சி மாறியதால் ஐ.மு.கூ. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.