மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு பெற்ற வெற்றி முறைகேடானது என்று குற்றம்சாற்றியுள்ளதுடன், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, அணு சக்தி ஒப்பந்தம் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் மற்றும் ஐ.தே.மு.கூ. ஆகியவை அறிவித்துள்ளன.
"நேற்று நடந்ததை மத்திய அரசு வேண்டுமானால் தனக்குத்தானே வெற்றி என்று கூறிக்கொள்ளலாம். அதே நேரத்தில் அந்த வெற்றியானது ஜனநாயகத்தின் தோல்வி" என்று இடதுசாரிகள், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கலந்தாய்வுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய அறிக்கையை வாசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "மக்களவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் வேண்டுமானால் மத்திய ஐ.மு.கூ. அரசு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நமது நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது.
ஆட்சியில் தொடருவதற்கான தார்மீக உரிமையை மன்மோகன் சிங் அரசு இழந்துவிட்டது. அதனால், மக்களின் முன்பு எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்த தேசம் தழுவிய போராட்டம் நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
"விலைவாசி உயர்வு, பணவீக்கம், விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி எங்களின் போராட்டம் இருக்கும்.
மத்தியப் புலனாய்வுக் கழகம் உள்ளிட்ட அரசுத் துறைகளை தவறாகப் பயன்படுத்துதல், மதவாத சக்திகள், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம்" என்றார் காரத்.