மக்களவையில் தாங்கள் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாற்றிய பா.ஜ.க. எம்.பிக்கள் 3 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் நேற்று மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கால், எஃப்.எஸ். குலாஸ்ட் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மகாவீர் பகோரா ஆகியோர் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு ரூ.1 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றம்சாற்றியதுடன், தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கொட்டினர். அவர்களுடன் மற்ற பா.ஜ.க. எம்.பி.க்களும் அவையின் நடுவில் வந்து கூடினர்.
இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க. எம்.பி.க்கள் கொண்டுவந்த பணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு உரிமை மீறல் தாக்கீது அனுப்பவும் சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மோகன் சிங் தெரிவித்தார்.