''இந்தியாவை புகை இல்லாத நாடு என்று மட்டும் அல்லாமல் புகையிலை இல்லாத நாடு என்று மாற்ற வேண்டும்'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், சண்டிகரை புகை இல்லாத நகரமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக டெல்லியை புகை இல்லாத டெல்லியாக மாற்ற முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை, தனியாருக்கு சொந்தமான இடங்களில் புகை பிடிக்க முற்றிலும் தடைவிதிக்க அரசு முடிவு செய்துள்ளதை மீண்டும் நினைவு கூறிய அவர், புகையிலைக்கு எதிரான சட்டவிதிகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
சினிமாவுக்கு நான் எதிரியல்ல. ஆனால் போலியோ ஒழிப்பு போன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளில் நடிகர்கள் வருவதால் அவர்கள் சினிமாவில் புகை பிடிக்கக்கூடாது.
சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதைப் பார்த்து 52 விழுக்காட்டினர் இந்தப் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். புகைப் பிடிப்பதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று அன்புமணி கூறினார்.