நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அல்லது தங்களது கட்சித் தலைவர் மாயாவதி கைது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் அரசின் தூண்டுதலின் பேரில் தங்கள் கட்சி எம்.பி.க்களை மிரட்டுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. பிரஜேஷ் பதக் கூறிய புகாரின் மீது விசாரணை நடத்த தான் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ம.பு.க. உதவியுடன் வெற்றிபெற மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற பதக்கின் புகாருக்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் ஆதரவளித்து குரல் எழுப்பிய பிறகு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இந்த உறுதியை அளித்துள்ளார்.
குருதாஸ் தாஸ்குப்தா (சி.பி.ஐ.), பாசுதேவ் ஆச்சார்யா (சி.பி.எம்.), பிரபுநாத் சிங் (ஜ.த.(ஐ)), ஆனந்த் கீட்டி மற்றும் யெரான் நாயுடு (டி.டி.பி.) ஆகியோர் எழுந்து பகுஜன் சமாஜ் கட்சியின் புகார் மீதான தங்களது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், ம.பு.க.வைத் தவறாகப் பயன்படுத்தியதில் முக்கியப் பொறுப்பாளிகளான உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லாததால், இந்தப் புகாரை விசாரிக்க நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரத்தில், புகாரை விசாரிக்குமாறு முதலில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைக் கேட்டுக்கொண்டு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அதற்கு எதிர்த்தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், பின்னர் அந்தப் புகாரைத் தானே விசாரிப்பதாக கூறினார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் எம்.பி. பிரஜேஷ் பதக் பேசுகையில், இன்று காலை தான் வீட்டில் இருந்து புறப்படுகையில் தன்னைச் சந்தித்த ஒரு நபர், மதியம் 2 மணிக்குள் பகுஜன் சமாஜ் கட்சி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியதாகத் தெரிவித்தார்.
மேலும் அந்த நபர், உ.பி.முதல்வர் மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளின் ஆவணங்களைக் கொடுத்ததுடன், மாயாவதியைக் கைது செய்யப் போவதாக எச்சரித்ததாகவும் பதக் கூறினார்.