மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் கடுமையான உடல்நலக் குறைவுடன் தலைநகர் டெல்லி வந்துள்ளனர்.
பிகானெர் தொகுதி எம்.பி. தர்மேந்திரா லாஸ் ஏஞ்செல்சில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட உடன் விமானம் மூலம் நேற்றிரவு டெல்லியை அடைந்தார்.
மராட்டிய மாநிலம் மலேகான் தொகுதி எம்.பி. ஹரிசந்திர சவான் நாசிக்கில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு டெல்லியை அடைந்தார். இவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் மாதக்கணக்கில் படுக்கையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மகேஷ் கனோடியாவும் டெல்லி வந்துள்ளார்.
பாத்ரூமில் தவறி விழுந்து இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதி எம்.பி. டி.சி.ஸ்ரீகாந்த் அப்பா மட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தன்னால் பங்கேற்க முடியாது என்று பா.ஜ.க. மேலிடத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உடல்நலக் குறையுடன் உள்ள எம்.பி.க்கள் நாடாளுமன்ற லாபியில் இருந்து வாக்களிப்பதற்கு மக்களவைத் தலைவரின் அனுமதியை பா.ஜ.க. பெற்றுள்ளது.
பா.ஜ.க. வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயும் தனது வாக்கை நாடாளுமன்ற லாபியில பதிவு செய்வார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.