நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்களிக்க, தண்டனை பெற்றுள்ள எம்.பி.க்களுக்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மக்களவையில் இன்று மாலை 6 மணியளவில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தனது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞரான மனுதாரர் ஆசோக் பாந்தேவின் வேண்டுகோளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு நிராகரித்தது.
இந்த மனுவை உடனடியாக விசாரிப்பதற்கு அவசியமில்லை என்று கூறிய அமர்வு, இதன்மீது எந்த விதமான இடைக்கால உத்தரவினைப் பிறப்பிப்பதற்கும் மறுத்து விட்டது.