மக்களவையில் இன்று நடைபெற உள்ள ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உமர் அப்துல்லாவின் இந்த முடிவு, மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்றிணைந்துள்ள எதிரணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானதால், இன்று மாலை நடைபெறும் வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து அவர் வாக்களிப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.