இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மறைத்து மக்களவையிலும் பொய் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் என்று இடதுசாரிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.
மக்களவையில் நம்பிக்கை வாக்குக் கோரிப் பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மறைத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நிலோத்பால் பாசு குற்றம்சாற்றினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கிய சிற்பிகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு ஆகியோரைப் பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் அந்தத் தலைவர்களுக்குக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மீறிவிட்டார். அவரது தலைமையிலான சிறுபான்மை அரதசு அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்றார் நிலோத்பால் பாசு.
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றாமல் மன்மோகன் சிங் அரசு துரோகமிழைத்ததால்தான், அரசிற்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்பெற வேண்டியதாகிவிட்டது என்று புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சந்திரசூடன் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்பது உறுதி என்பது போல மக்களவையில் பிரதமரின் பேச்சு இருந்தது என்று பார்வார்ட் பிளாக் கட்சியின் செயலர் ஜி.தேவராஜன் கூறினார்.