இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம் என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவாத்த்தில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய உண்மைகளை மத்திய அரசு மறைப்பதாக எழுந்த குற்றச்சாற்றுக்களை வன்மையாகக் மறுத்தார்.
"அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றியும், அதை எதிர்ப்பவர்களின் கோரிக்கைகளையும் நாங்கள் புரிந்துள்ளோம். ஹைட் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அதன் சில பகுதிகள் ஏற்கத்தக்கதல்ல என்று அமெரிக்காவிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். ஒருவேளை 123 ஒப்பந்தம் ஹைட் சட்டத்துடன் இணைக்கப்பட்டால், அடுத்தக் கணம்தான் அமெரிக்காவுடன் நாம் நடத்திவரும் பேச்சின் முறிவுப்புள்ளியாக இருக்கும்" என்று பிரணாப் கூறினார்.
”இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தமும், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் இறுதி செய்யவுள்ள கண்காணிப்பு ஒப்பந்தமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் எங்குமே ஹைட் சட்டம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. 123 ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் ஹைட் சட்டம் என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா? என்று நான் சவால் விடுகிறேன்" என்றார்.
ஹைட் சட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறிய பிரணாப், அந்தப் பகுதிகளை அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், நமது நாட்டின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைகளில் சமரசத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இடம் தராது என்றும் கூறினார்.
"ஹைட் சட்டம் பற்றிச் சர்ச்சைகள் ஏற்பட்டவுடன், இடதுசாரிகளின் கவலைகளை நீக்கி அணு சக்தி ஒப்பந்தத்தின் நன்மைகளைப் பற்றி விளக்குவதற்கான முயற்சிகளை பிரதமரும் ஐ.மு.கூ. தலைவர் சோனியா காந்தியும் மேற்கொண்டனர்.
இதையடுத்து அமைக்கப்பட்ட இடதுசாரி- ஐ.மு.கூ. உயர்மட்டக் குழுவின் முக்கிய நோக்கமே, ஹைட் சட்டமும் 123 ஒப்பந்தமும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி விவாதிப்பதுதான். உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் முடிவுகளை அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இடதுசாரிகளுடன் மத்திய அரசு ஒன்பது கூட்டங்களை நடத்தியுள்ளது. இதில் ஆறு கூட்டங்கள் சுமூகமாக முடிந்தன. நவம்பர் 2007 முதல்தான் பிரச்சனை ஆரம்பித்தது." என்றார் பிரணாப் முகர்ஜி.
இடதுசாரிகளின் முக்கியக் கோரிக்கைகளாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தன வருமாறு:
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஐ.ஏ.இ.ஏ. என்னென்ன நிபந்தனைகளின் கீழ் அங்கீகரிக்கும்?
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் அணு உலைகளை பிரித்தளிக்கும் திட்டத்திற்கு ஐ.ஏ.இ.ஏ. ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய அரசால் உறுதியளிக்க முடியுமா?
அணு உலைகளுக்கான எரிபொருள் வழங்கலில் தடை ஏற்படும் சூழ்நிலையில் ஐ.ஏ.இ.ஏ. உதவுமா?
ஐ.ஏ.இ.ஏ. உடன் இறுதி செய்யப்பட உள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தை பொதுவில் வெளியிடாதது ஏன்?
இவை அனைத்திற்கும் அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுகையில் பதிலளிக்கிறோம் என்று நாங்கள் தெரிவித்தோம். ரகசிய ஆவணங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமாகப் பார்க்கப்படுகின்றன. இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தை தங்களது ஆளுநர் குழுவிற்குள் சுற்றுக்கு விடுவதற்கு முன்பு வெளியிட வேண்டாம் என்பது ஐ.ஏ.இ.ஏ.வின் நிபந்தனை. அதன்படி ஒப்பந்தம் சுற்றுக்கு விடப்பட்டதும்தான் அதை வெளியிட்டோம் என்றார் பிரணாப்.
அமெரிக்காவின் இணைய தளத்தில் கண்காணிப்பு ஒப்பந்தம் முதலில் வெளியிடப்பட்டு விட்டது என்று எழுந்த சர்ச்சை பற்றி அவர் கூறுகையில், "பன்னாட்டு அளவில் வேறுபடும் நேரத்தால் வந்த சிக்கல் அது. மற்றபடி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரே நேரத்தில்தான் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது" என்றார்.