"அணு ஆயுதம் என்பது போரில் வெற்றிபெறுவதற்கான ஆயுதமல்ல என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். அது பேரழிவை மட்டுமே விளைவிக்கும்... இருந்தாலும் அணு ஆயுதத் தயாரிப்பு உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்" என்றார் பிரணாப் முகர்ஜி.
மக்களவையில் இன்று இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஏன் விரும்புகிறது என்று விளக்குகையில் சிறிது ஆத்தரமடைந்த நிலையில் காணப்பட்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சில வரலாற்று குறிப்புகளை எடுத்துக்காட்டுகையில் கண்கலங்கினார்.
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணு திட்டங்களை ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி கூறியது உண்மையல்ல என்ற பிரணாப் முகர்ஜி, அத்வானியை நோக்கி, "நீங்கள் பேசும் ஆர்வத்தில் மொரார்ஜி தேசாயும் ஜவஹர்லால் நேருவும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர் என்று குறிப்பிட்டீர்கள். ஜவஹர்லால் நேரு 1964 இல் இறந்து விட்டார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970 இல்தான் கொண்டு வரப்பட்டது. இறந்த மனிதர் எப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ நிராகரிக்கவோ முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
பொக்ரான் அணு ஆயுதச் சோதனைக்கு அடித்தளமிடும் நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் முதன்முதலில் மேற்கொண்டார். "அணு ஆயுதமயமாக்களை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்காக எங்கள் நலனைக் கருத்தில்கொண்டு அணு ஆயுதத் தயாரிப்பு கொள்கைகளை கைவிட மாட்டோம்" என்று ராஜீவ் காந்தியும் பன்னாட்டு அளவில் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றார் பிரணாப்.
அணு ஆயுதங்கள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளது என்று குறிப்பிட்ட பிரணாப், "அணு ஆயுதம் என்பது போரில் வெற்றிபெறுவதற்கான ஆயுதமல்ல என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். அது பேரழிவை மட்டுமே விளைவிக்கும்... இருந்தாலும் அணு ஆயுதத் தயாரிப்பு உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்" என்றார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நமது அயலுறவுக் கொள்கைகளை பாதிக்காது என்று கூறிய பிரணாப், ஒரு அரசியல்வாதியாகத் தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அயலுறவுக் கொள்கை சார்ந்த எந்த விடயமும் இதுபோல விவாதிக்கப்பட்டது இல்லை என்றார்.
அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், "அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2005-இல் பிரதமர் அமெரிக்காவிற்குச் சென்றார். அவர் நாடு திரும்பிய ஒரு வாரத்திற்குள் ஜூலை 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. 2006 ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மேலும் 2 முறை விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்துள்ளார்" என்றார்.