மத்திய அரசு சிறுபான்மை நிலையை அடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியதை மறுத்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இடதுசாரிகள் ஆதரவை விலக்கிய பிறகும் மத்திய அரசிற்கு 276 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறினார்.
பிரதமரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அத்வானியின் குற்றச்சாற்றுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய அரசு சிறுபான்மை நிலையை அடைந்து விட்டதாகப் பா.ஜ.க. தலைவர் தவறான தகவல்களைத் தருவதாகக் குற்றம்சாற்றினார்.
தற்போதைய நிலவரப்படி அரசிற்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கட்சிகள் வாரியாகப் பட்டியலிட்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இடதுசாரிகள் ஆதரவை விலக்கிய பிறகும் ஐ.மு.கூ. அரசிற்கு 276 எம்.பிக்களின் ஆதரவு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"நாளை என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம். நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தாலும் ஒன்றுமில்லை. எங்களைச் சிறுபான்மை அரசு என்று அழைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் நாளை வரையாவது எதிர்கட்சித் தலைவர் பொறுக்க வேண்டும்" என்றார் அவர்.
பா.ஜ.க. ஒருபோதும் அரசுகளை நிலைதடுமாறச் செய்ததில்லை என்று அத்வானி கூறியதற்குப் பதிலளித்த பிரணாப், 1977 இல் எட்டு மாநிலங்களின் அரசுகளை ஜனதா கட்சி ஆட்டம்காணச் செய்ததையும், பின்னர் 1989 இல் வி.பி.சிங் அரசிற்குப் பா.ஜ.க. நிபந்தனை அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்ததையும் உதாரணம் காட்டினார்.