நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் முழுப் பொறுப்பு என்றும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் கைப்பாவையாகவும் இளைய கூட்டாளியாகவும் மாற்றுவதற்கான இரு தனி நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
"தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியைப்போல ஐ.மு.கூ. அரசு உள்ளது. அது பிழைக்குமா பிழைக்காதா என்பதுதான் ஒவவொருவரும் கேட்கும் முதல் கேள்வி ஆகும்" என்று, பிரதமரையும் மத்திய ஐ.மு.கூ. அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் அவர்.
"நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு இதற்கு பா.ஜ.க.வோ இடதுசாரிகளோ காரணம் அல்ல. பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசுதான் நேரடி முழுப் பொறுப்பு. மத்திய அரசு நாளை பிழைத்தாலும், அதன் தலைவிதியை அடுத்த தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்." என்றார் அவர்.
"அணு சக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமான என்று மத்திய அரசு கருதுமானால், ஏன் அதுபற்றிக் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்திலோ அல்லத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. இந்த ஒப்பந்தம் இரண்டு தனி மனிதர்களுக்கு இடையிலானது. ஒருவர் நமது பிரதமர்" என்று அத்வானி குற்றம்சாற்றினார்.
அணு சக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசு மாற்றி மாற்றிப் பேசுவதாக குற்றம்சாற்றிய அத்வானி, "நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையை அணுகுவோம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இடதுசாரிகளிடம் உறுதியளித்திருந்தார் ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் விருப்பப்படி பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு அனுப்பப்பட்டு விட்டது" என்றார்.
ஒருதலைபட்சமான ஒப்பந்தம்!
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது என்றும், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியா மாறிவிடும் அபாயம் உள்ளது என்றும் அத்வானி கூறினார்.
அமெரிக்காவின் நல்லுறவிற்குத் தாங்கள் எதிரியல்ல என்றும், ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் அத்வானி தெளிவுபடுத்தினார்.