நமது நாட்டு மக்களின் நலனிற்காகத்தான் தனது அரசு எந்தவொரு முடிவையும் எடுத்துள்ளது என்று மக்களவையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
"நான் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேச நலனிற்காகத்தான் மேற்கொண்டு வந்துள்ளேன்" என்று, தனது அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோருகையில் பிரதமர் கூறினார்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நடவடிக்கைகளைத் தனது அரசு மேற்கொண்டு வரும் வேளையில், அரசு பதவியேற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசின்மீது நம்பிக்கை கோருவதற்காக அவை கூடியுள்ளது கவலை அளிப்பதாகப் பிரதமர் கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் நடவடிக்கைகளான பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது, அணு தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் விலக்குப் பெறுவது உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு முன்பு நமது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவேன் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தான் மீண்டும் உறுதியளிப்பதாக பிரதமர் கூறினார்.
மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியது பற்றிக் கூறுகையில், ஐ.மு.கூட்டணியை உருவாக்கிய சிற்பிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு ஆகியோரின் அறிவுகூர்மையும் தொலைநோக்குப் பார்வையும் மகத்தானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தான் ஜப்பானில் இருந்தபோது இடதுசாரிகள் தங்கள் ஆதரவை விலக்கியது குறித்து ஆச்சர்யம் தெரிவித்த பிரதமர், "ஜப்பானில் இருந்து நான் திரும்பிய அடுத்த கணமே, குடியரசுத் தலைவரைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் எனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று தெரிவித்தேன்" என்றார்.
தனது தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தபோது, ஐ.மு.கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் மேசைகளைத் தட்டி ஆமோதித்தனர்.