மக்களவையில் இன்று மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த பிரதமர் மன்மோகன் சிங், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு.கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
காலை 10.20 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர், அங்கு குவிந்திருந்த செய்தியாளர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர் பேசிய அவர், ஐ.மு.கூட்டணிக்கு உள்ள எம்.பி.க்களின் ஆதரவை மக்களவையில் நிரூபிப்போம் என்று கூறினார்.
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் இன்று துவங்கும் 2 நாள் சிறப்புக் கூட்டத் தொடரில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார்.
‘அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்யும் பிரதமர், அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசுகிறார். இதையடுத்து நாளை நடைபெறும் கூட்டத்தில் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.மு.கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கியது.