மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலர் ஷாஹித் சித்திக் அக்கட்சியிலிந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நாள் முதல் சிக்கலில் இருந்துவரும் சமாஜ்வாடி கட்சி, அதன் பொதுச்செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஷாஹித் சித்திக் விலகியுள்ளதால் மேலும் கலகலத்துள்ளது.
துவக்கத்தில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பேசிவந்த சித்திக், “கடந்த ஒரு மாத காலமாக குழப்பத்திலேயே இருந்தேன். இந்த ஒப்பந்தம் நமது தேச நலனைச் சார்ந்தது அல்ல என்ற முடிவிற்கு வந்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக இதை நான் எதிர்த்து வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
தான் சமாஜ்வாடி கட்சியிலிருந்தும் விலகவும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது உ.பி. முதலமைச்சர் மாயாவதியும் உடனிருந்தார்.
மக்களவையில் 39 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சமாஜ்வாடிக் கட்சி, முனாவர் ஹாசன், ராஜ் நாராயன் புதோலியா, ஜெய்பிரகாஷ், எஸ்.பி.பாகேல் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துவிட்டதால் 35 ஆக குறைந்துள்ளது.
தற்பொழுது அக்கட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற சித்திக் விலகியுள்ளதால், மக்களவை வாக்கெடுப்பில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், இவரைத் தொடர்ந்து மேலும் பலர் வெளியேறக்கூடும் என்றும், வாக்கெடுப்பின்போது பல சமாஜ்வாடி உறுப்பினர்கள் கட்சி மாறி ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.