புதுடெல்லி, ஜூலை 19, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கிறது.
என்றாலும், தமது கட்சியின் முடிவு குறித்து அதன் தலைவர் தேவேகவுடா எந்த தகவலையும் கூற மறுத்து விட்டார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தேவேகவுடா உட்பட 3 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங், நேற்று தேவேகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தேவேகவுடா இன்று புதுடெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேவேகவுடா, அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன், அதுபற்றி தமது கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.
மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தேவேகவுடாவிற்கு அக்கட்சி வழங்கியுள்ளது.
அரசுக்கு ஆதரவளிப்பதில் எந்த முடிவை எடுத்தாலும், அது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நலன் கருதியே இருக்கும் என்றார் தேவேகவுடா.