நாடாளுமன்றத்தில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள சோனியாவின் இல்லத்தில் குழுவாரியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, பெரும்பான்மையை நிரூபித்து அரசு வாக்கெடுப்பில் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டும் பணியில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்க பா.ஜ.க.வும், இடதுசாரி கட்சிகளும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
இதனால், வாக்கெடுப்புக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.