நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ள நிலையில், இன்று முலாயம் சிங் தலைமையில் நடந்த சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை அக்கட்சியின் 23 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.
மத்திய அரசிற்கு ஆதரவளிக்கும் விடயத்தில் சமாஜ்வாடிக் கட்சியின் எல்லா எம்.பி.க்களுக்கும் சம்மதமில்லை என்று வெளியான தகவல்கள் இதன்மூலம் உறுதியாகி உள்ளது.
இன்று நடந்த சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு காப்பாற்றப்படுவதற்கு சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும், அதன்மூலம் சமாஜ்வாடிக் கட்சிக்குக் கிடைக்கக் கூடிய அரசியல் ஆதாயம் பற்றியும் கட்சித் தலைவர் முலாயம் சிங், பொதுச் செயலர் அமர்சிங் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.
சமாஜ்வாடி எம்.பி.க்களில் அடீக் அகமது, அஃப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் உள்ளனர். ராஜ் பப்பார், பெனி பிரசாத் வர்மா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முனவார் ஹசன் மத்திய அரசிற்கு எதிராக வாக்களிப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதேபோல ராஜ்நாராயண் புதோலியா, ஜெய் பிரகாஷ் ஆகியோரும் அதிருப்தியில் உள்ளனர்.
இவர்கள் 7 பேர் தவிர கீர்த்தி வர்தன் சிங், ரேவதி ராமன் சிங் ஆகிய இருவர் கடந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.