மத்திய அரசிற்கான ஆதரவை விலக்குவது குறித்த குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் அளித்த எம்.பி.க்கள் பட்டியலில் இருந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் நீக்கப்பட உள்ளது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் கொடுத்ததுடன், மத்திய அரசிற்கு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்குமாறு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் இடம்பெற்று இருந்ததால், அவர் பதவி விலகுவாரா என்று விவாதங்கள் கிளம்பி சர்ச்சையை உண்டாக்கின.
மக்களவைத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால், அவர் பதவி விலகத் தேவையில்லை என்று மக்களவைத் தலைவர் அலுவலகமும், பதவிவிலக மாட்டேன் என்று சோம்நாத் சாட்டர்ஜியும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ஆகவிருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போகிறாரா என்பது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் விளக்கம் கேட்டிருந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்ட்ட எம்.பி.க்கள் பட்டியலில் இருந்து சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.