நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று ஐ.மு.கூ. முயற்சித்து வரும் நிலையில், அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தேசிய லோக்தந்ரிக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைத் தாங்கள் எதிர்ப்பதால், 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசிற்கு எதிராக வாக்களிக்குமாறு தங்களது ஒரே எம்.பி.யான பாலேஸ்வர் யாதவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தேசிய லோக்தந்ரிக் கட்சியின் தலைவர் அர்ஷாத் கான் தெரிவித்துள்ளார்.
பாலேஸ்வர் யாதவ் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளதை மறுத்த அர்ஷாத் கான், சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறிவிட்ட பாலேஸ்வர் யாதவ் தற்போது தேசிய லோக்தந்ரிக் கட்சியில் இணைந்துவிட்டதாக கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் அணு சக்தி ஒப்பந்தத்தைப் பற்றி சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் மற்றும் அமர்சிங் ஆகியோருக்கு மட்டுமே விளக்கினார். மற்ற கட்சிகளுக்கும் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றார் அர்ஷாத் கான்.