நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒருவேளை மத்திய அரசு தோற்குமானால், பா.ஜ.க. அரசமைக்க முயற்சிக்காது மாறாக தேர்தல் வேண்டும் என்று வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதுடன், பணபலத்தையும் பயன்படுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
தனது நான்காண்டு கால ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தான் ஆட்சி செய்துவரும் மாநிலங்களின் அரசு இயந்திரங்களை ஐ.மு.கூட்டணி தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றார் வெங்கையா நாயுடு.
வருகிற 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் விழும் வாக்குகள் அணு சக்தி ஒப்பந்தம் மீதானது மட்டுமல்லாமல், அயலுறவு கொள்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்துள்ள மத்திய அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சித் திறமையின் மீது விழும் வாக்குகள் ஆகும் என்பதால் மத்திய அரசு நிச்சயம் தோற்கும் என்றார் அவர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு ஒருவேளை தோற்றால், அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் எதிரிகள் என்று சாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வெங்கையா நாயுடு, பா.ஜ.க. ஆட்சியமைக்க முயலாது என்றும் தேர்தல் வேண்டும் என்று வலியுறுத்தும் என்றும் கூறினார்.