அணு சக்தி, அயலுறவுக் கொள்கை உள்ளிட்ட விடயங்களில் தனது கட்சியோ அதன் தலைவர்களோ தேச நலன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
"தேச நலன்களில் சமரசம் செய்துகொள்வதாக எங்கள் மீது குற்றம்சாற்றப்படுகிறது... இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அளப்பரிய தியாகத்தை கொண்டுள்ள, சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனப்படுத்தாது என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றார் அவர்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு இடதுசாரிகள் அளித்து வந்த ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது பற்றிக் குறிப்பிடுகையிவ் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனிற்கு உகந்தது என்று வலியுறுத்திய சோனியா, எந்த அரசியல் கட்சியின் சான்றிதழும் எங்களுக்குத் தேவையில்லை என்றார்.