நமது நாட்டில் புதிதாக 8 ஐ.ஐ.டி.க்கள் ரூ.6,080 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ஒரிசா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், பீகார் ஆகிய 8 இடங்களில் புதிய ஐ.ஐ.டி.க்கள் அமையவுள்ளன.
இந்தப் புதிய ஐ.ஐ.டி.க்களை நிறுவுவதுடன், அவற்றிற்கான சட்டபூர்வ அங்கீகாரங்களை உருவாக்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்தவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
வருகிற கல்வி ஆண்டில் இருந்து புதிய ஐ.ஐ.டி.க்களை செயல்படுத்தும் வகையிலான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஐ.ஐ.டி.யிலும் தலா ஒரு இயக்குநர், ஒரு பதிவாளர் மற்றும் முதல் மூன்று ஆண்டுகளில் 30 பேராசிரியர் பணியிடங்களை உருவாக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் ஆறு ஆண்டுகளில் ரூ.6,080 கோடி நிதியை அரசிடம் இருந்து பெறும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாக்கப்படும் உயர்தரமான பொறியில் மற்றும் அறிவியல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர்கள் ஆகியோருக்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவியல் மற்றும் பொறியியலில் அறிவுசார் சொத்து உருவாக்கம் ஆகிய பணிகளுக்கும் புதிய ஐ.ஐ.டி.க்கள் பயனளிக்கும் என்றார் அமைச்சர் சிதம்பரம்.