வங்கித் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் வி.கே.சர்மா கூறுகையில், வங்கிகளைத் தனியார்மயமாக்க கூடாது, வங்கித் துறையில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது, பொதுத்துறை வங்கிகளுக்கு ஊரகப் பகுதிகளில் கூடுதலான கிளைகளைத் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு பெரிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சர்மா, கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 68 நிறுவனங்கள் மொத்தம் ரூ.353.26 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.