வருகிற 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை 2200 முதல் 2400 வரையிலான எடை உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உதவும் 6 ஜி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களுக்கு நிதியளிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.272.9 கோடி மதிப்பிலான அயல்நாட்டு உபகரணங்கள் அடங்கிய, மொத்தம் ரூ.1,280.96 கோடி மதிப்புள்ள 6 ஜி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களைத் தயாரிப்பதற்கான நிதியை அளிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் முதலாவது செலுத்து வாகனமான ஜி.எஸ்.எல்.வி. - எஃப்01 கடந்த 2004 ஆம் ஆண்டு 1950 கிலோ எடையுள்ள கல்வி செயற்கைக்கோளை (EDUSAT) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
செப்டம்பர் 2007- இல் ஜி.எஸ்.எல்.வி.- எஃப்04 செலுத்து வாகனம் 2130 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட்- 4சிஆர் (INSAT-4CR) ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இனி தயாரிக்கப்படவிருக்கும் செலுத்து வாகனங்களின் வரிசை ஜி.எஸ்.எல்.வி. - எஃப்06 முதல் எஃப்011 வரையாகும்.