தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. தலைவர் காடுவெட்டி குருவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் பா.ம.க. பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.
குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் விளக்கியதுடன், குருவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பா.ம.க. உயர்மட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்குச் சில நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசிடம் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பதன் காரணத்தைப் பற்றிக் கேட்டதற்கு, "நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் எங்களின் கோரிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார் அமைச்சர் அன்புமணி.
"அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாங்கள் அறிவித்துள்ளோம். அதற்கான தீர்மானத்தையும் எங்கள் கட்சி ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது" என்றார் அவர்.
குரு விடுதலை பற்றி மத்திய அரசின் பதில் என்ன என்று கேட்டதற்கு, "இதுபற்றி மாநில அரசிடம் பேசுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது" என்றார் அன்புமணி.