பா.ஜ.க.வுடன் இடதுசாரிக் கட்சிகள் கைகோர்ப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.
"மதவாத சக்தியான பா.ஜ.க.வை எதிர்க்கும் முதல் கட்சியாக நாங்கள் இருப்போம். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டோம் என்று சொல்வது நியாயமற்றது. இப்போதுள்ள சூழ்நிலைக்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று சென்னையில் ராஜா கூறினார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் சுதந்திரமான அணு சக்திக் கொள்கைகளை பாதிக்கும் என்று கூறியுள்ள ராஜா, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சிற்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கிவிட்டார் என்றார்.