இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனிற்கு மிகவும் அவசியமானது என்பதை, அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு முழுமையான ஆதரவு உள்ளது என்று கூறிய ராகுல், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"தத்துவரீதியாகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ அணு சக்தி ஒப்பந்தம் எதிர்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி சரியான முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் நலன் சார்ந்து செயல்படுகிறார் என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. அரசு வீழ்ந்தாலும் அது நாட்டின் நலனிற்காகத்தான் இருக்கும்.
அணு சக்தி ஒப்பந்தம் இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு அவசியமானது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். என்னைப் பொறுத்தவரை பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவு சரியானது. நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம்." என்றார் ராகுல்.
இந்தியாவின் அடிப்படையான எரிசக்திப் பிரச்சனைகளுக்கு அணு சக்தி ஒப்பந்தம்தான் ஒரே தீர்வு என்ற ராகுல், "அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பை மீறி நிறைவேற்ற ஒரு தைரியம் வேண்டும். அது நமது பிரதமருக்கு உள்ளது. அதை நான் பாராட்டுகிறேன். ஒப்பந்தத்தை செயல்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கும்படி அவரை நான் வேண்டுகிறேன். அதுதான் தலைமைப்பண்பு"என்றார்.