சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் பிற நாடுகளுக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க சுய ஒழுங்குமுறை நடைமுறைகளை அமல்படுத்தி இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று சிறுவர் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் எந்த ஒரு வடிவத்திலும் சிறுவர் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய சமூகத் தணிக்கை (social auditing) செய்யுமாறும் கூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள், மானில தலைமைச் செயலர்கள் ஆகியோருக்கு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா அனுப்பியுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்:
"சிறுவர் தொழிலாளர்கள் இன்னமும் நடைமுறையில் இருப்பது குறித்து சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் (National Commission for the Protection of Child Rights) தீவிர கவலை கொண்டுள்ளது. வீடுகளிலும், முறைசாரா தொழில் அமைப்புகளிலும் இன்னமும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். சமூக சேவைகர்கள், ஊடகங்களும் சிறுவர் தொழிலாளர்களை புதிய வடிவத்தில் வேலைக்கு அமர்த்துவதை தினசரி அடிப்படையில் தகவல்களை அளித்து வருகின்றனர். பல குழந்தைகள் கொத்தடிமைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மரபணு மாற்றபட்ட பருத்தி வயல்கள், எம்பிராய்டரி மற்றும் பிற தொழிற்துறைகளில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேலைக்காக குழந்தைகளை வெளி மாநிலங்களுக்கு, வெளி நாடுகளுக்கு அனுப்புதல் போன்ற போக்குவரத்து நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆணையம் கவன ஈர்ப்பு கொண்டுள்ளது. கடைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்தும், இன்னமும் லட்சக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.
சிறுவர் நீதிச் சட்டம், 2006, கொத்தடிமைச் சட்டம் ஆகியவற்றை பலப்படுத்தி கடைபிடிக்கவேண்டும் என்று மாநிலத் தலைமை செயலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்புப் படை ஒன்றை உருவாக்கி சமூகத் தணிக்கை செய்ய மாநில அரசுகளுக்கு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதேபோல் வீடுகளில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கவும் சிறப்புப் படை குடியிருப்பு வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.