இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்பாக ஐ.நா.வின் கீழ் இயங்கும் பன்னாட்டு அணு சக்தி முகமை(ஐ.ஏ.இ.ஏ.) யிடம் வெள்ளிக்கிழமை வியன்னாவில் இந்தியா விளக்கமளிக்க உள்ளது.
ஐ.ஏ.இ.ஏ. வில் உறுப்பினர்களாக இல்லாத, அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவில்(என்.எஸ்.ஜி) உள்ள நாடுகளுக்கும் இந்தியா விளக்கமளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர் குழுவில் உள்ள 36 நாடுகளில் 26 நாடுகள் என்.எஸ்.ஜி.யிலும் உறுப்பினர்களாக உள்ளன.
கண்காணிப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபிறகு என்.எஸ்.ஜி. யில் உள்ள 45 நாடுகளிடம் இருந்தும் இந்தியாவிற்கு விலக்குப் பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர் குழுவில் உறுப்பினர்களாக இல்லாத மற்ற என்.எஸ்.ஜி. உறுப்பினர்களுக்கும் சிறப்பு விளக்கமளிப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களிடம் விளக்கமளிப்பதற்காக மத்திய அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன், அணு சக்தித் துறைச் செயலர் ஆர்.பி.குரோவர் ஆகியோர் வியன்னா செல்கின்றனர்.
முன்பு, ஐ.ஏ.இ.ஏ.வில் உறுப்பினர்களாக உள்ள 140 நாடுகளுக்கும் இந்தியா விளக்கமளிக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது ஐ.ஏ.இ.ஏ. முடிவின்படி அதன் ஆளுநர்களான 35 நாடுகளுக்கு
மட்டும் விளக்கினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கமளிப்பு கூட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள் கூடி கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது பற்றி முடிவெடுக்க உள்ளனர்.