மத்திய ஐ.மு.கூ. அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியதைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவிவிலக வேண்டுமா என்பது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் மீண்டும் கூறியுள்ளார்.
பா.ஜ.க. வுடன் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக வாக்களிக்கத் தான் விரும்பவில்லை என்றும், மக்களவைத் தலைவர் பதவியில் தான் நீடிக்க விரும்புவதாகவும் தெரிவித்து பிரகாஷ் காரத்திற்கு சோம்நாத் சாட்டர்ஜி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விடயத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைத் தோற்கடிக்க பகுஜன் சமாஜ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கை கோர்த்து உள்ளதும் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அதிருப்தியை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சர்ச்சைகள் தொடர்பாகவும், மத்திய அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்ட பின்னணிக் காரணங்கள் குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் 19-20 தேதிகளில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்துச் சென்னையில் உள்ள காரத்திடம் கேட்டதற்கு, "இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே விளக்கியுள்ளோம். பதவிவிலகும் முடிவு சோம்நாத்தின் கைகளில் உள்ளது" என்றார்.
இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால், ஆதரவு விலக்கல் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெரும் இணைக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் தற்போது அவர் மக்களவைத் தலைவர் என்பதையும், அந்தப் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.