வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக ஹரியானாவைச் சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.பி. குல்தீப் பிஸ்னாய் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் இளைய மகனான குல்தீப் பிஸ்னாய், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். நான் அரசியல் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை என்பதால், அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன்" என்று சண்டிகரில் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்து 10 அதிருப்திகளைக் குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ள பிஸ்னாய், காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதவிவிலகல் கடிதத்தை மக்களவைத் தலைவருக்கு அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும், அந்தக் கடிதம் இன்றுவரை ஏற்கப்படவில்லை என்று கூறிய பிஸ்னாய், காங்கிரஸ் தலைமை தன்னை எந்த நேரத்திலும் தகுதிநீக்கம் செய்யலாம் என்று தான் அஞ்சுவதாகக் கூறினார்.
ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 எம்.பி. தொகுதிகளில் 9 காங்கிரசிடமும், 1 பா.ஜ.க.விடமும் உள்ளது.