நாடாளுமன்றத்தில் 21-22 தேதிகளில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மதசார்பற்ற ஜனதா தளம் மத்திய அரசிற்கு எதிராக வாக்களிக்கும் என்று கருதப்படுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா வருகிற 18 ஆம் தேதி இதை அறிவிப்பார் என்று அக்கட்சியின் பேச்சாளரும் கர்நாடகச் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.எஸ்.தத்தா பெங்களூரில் இன்று தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளம் எப்போதும் அணு ஆயுதங்களை எதிர்க்கிறது. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு ஆயுதச் சோதனை நடத்தியதையும் நாங்கள் எதிர்த்தோம் என்றார் தத்தா.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சின் கொள்கைகளை மதசார்பற்ற ஜனதா தளம் நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் இன்னும் ஓரிரு நாட்களில் தேவகவுடா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தைச் சந்தித்துத் தனது முடிவைத் தெரிவிக்க உள்ளார்.
மக்களவையில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர்.