ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள மன்மோகன் சிங் அரசு, இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள எல்லா ராணுவக் கூட்டு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்தும் அக்கட்சி கட்சி கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் மிரட்டலால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள மத்திய அயலுறவு அமைச்சகம், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு உண்டான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள் ''டெக்சார்''- ஐ விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) உதவியுள்ளது.
ஈரானைக் கண்காணிப்பதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன. ஒருவேளை ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்படுமானால், டெக்சார் செயற்கைக்கோள் அதற்கு நிச்சயம் உதவும்.
இதனால் டெக்சார் வரிசையில் இன்னும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரேல் முயற்சிக்கு இஸ்ரோ உதவக் கூடாது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.