ஈரான் மீது எந்தவிதமான ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை "ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச அணுகுமுறை" என்றும், "ஆசியாவிற்கு பேரழிவை விளைவிக்கக் கூடிய அபாயத்தை உள்ளடக்கியது" என்றும் இந்தியா கூறியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தியா, ஈரானின் அணுத் திட்டங்கள் பற்றிய சர்ச்சைகளுக்கு ராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்று கூறியுள்ளதுடன், அமைதியை ஏற்படுத்த முயற்சிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈரானின் அணுத் திட்டங்கள் பற்றிய பேச்சுக்கள் தோல்வியடைந்தால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கேட்டுக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த மத்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா, "ஈரானிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது" என்றார்.
"ஈரான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது" என்ற சர்னா, "ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச அணுகுமுறையை உள்ளடக்கிய எந்தவிதமான ராணுவத் தாக்குதலையும் இந்தியா எதிர்க்கிறது" என்றார்.
படைளைப் பயன்படுத்துதல், பயமுறுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்காது என்ற அவர், முறையான பேச்சுக்களுக்கு இந்தியா எப்போதும் உதவி செய்யும் என்று உறுதி தெரிவித்தார்.