மக்களவைத் தலைவர் பதவி கட்சி சாராதது என்பதால், சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதை அடுத்து, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்று அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றிய காங்கிரஸ் கட்சியின் கருத்தை புது டெல்லியில் இன்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியிடம் கேட்டதற்கு, "சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலகுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யக் கூடாது. சோம்நாத் சாட்டர்ஜிதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
"மக்களவைத் தலைவர் பதவி என்பது கட்சி சாராதது என்பதை நாடாளுமன்ற வரலாறு மற்றும் சட்டம் நமக்கு எடுத்துரைத்துள்ளது. சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது" என்றும் சிங்வி கூறினார்.