மத்திய அரசைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாகவும், ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி வரை தருவதற்கு அக்கட்சி தயாராக உள்ளதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் குற்றம்சாற்றியுள்ளார்.
இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிய பிறகு, சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மத்திய ஐ.மு.கூ. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 272 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக தீவிரமான குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாகவும், ஒரு எம்.பி.யின் ஆதரவைப் பெறுவதற்கு ரூ.25 கோடி வரை செலவிடுவதற்கு காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளதாகவும் ஏ.பி.பரதன் கூறினார்.
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி எம்.பி.க்களின் ஆதரவைக்கூட பெறுவதற்கு ஐ.மு.கூ. அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க அணு சக்தி உதவும் என்று மத்திய அரசு கூறி வருவதைப் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள பரதன், அணு சக்தியால் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை குறைந்தபட்சம் யூனிட் ஒன்று ரூ.5.5 வரை விற்கப்படும் என்றார்.
"அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு ஆகும் செலவுகள் கூட மிகவும் அதிகம். இவ்வளவு செலவு செய்து தயாரிக்கப்படும் அணு மின்சாரம் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் 7 முதல் 8 விழுக்காட்டைத்தான் நிறைவு செய்யும் என்று திட்டக்குழுவே கூறியுள்ளது" என்றார் பரதன்.