சாதாரண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ள மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்துக் கவிழ்த்தே தீருவோம் என்று இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சாதாரண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று கூறி மத்திய ஐ.மு.கூ. அரசிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை இடதுசாரிகள் இன்று துவங்கினர்.
அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக இந்தியா மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய இடதுசாரிகள், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை நாடு சந்தித்து வரும்போது, அதைத் தீர்ப்பதை விட்டுவிட்டு அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயல்வதால் அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கியதாக விளக்கமளித்துள்ளனர்.
சிறுபான்மை அடைந்துள்ள நிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்லும் மத்திய அரசை வன்மையாகக் கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "காங்கிரசின் கை அமெரிக்காவிற்கு மடங்கியுள்ளது" என்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசைத் தோற்கடிக்க இடதுசாரிகள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும், அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தில் இன்னும் பல கட்சிகள் இணைந்துகொள்ளும் என்றும் காரத் நம்பிக்கை தெரிவித்தார்.
"அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்- சிற்கு 20 முதல் 25 விழுக்காடு மக்களின் ஆதரவுதான் உள்ளது. அவர் ஒரு சிறுபான்மை அதிபர். இப்போது நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறுபான்மை அரசின் பிரதிநிதி. சிறுபான்மை அதிபரும் சிறுபான்மை பிரதமரும் சேர்ந்து தேசத்தை உயர்த்தப் போகிறார்கள்." என்றார் அவர்.
மத்திய அரசும் காங்கிரசும் ஜார்ஜ் புஷ்-சிற்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளன. பணவீக்கம் அல்லது விலைவாசியைக் கட்டுப்படுத்துவதை விட இதுதான் அரசின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. இதனால்தான் ஆதரவை விலக்கினோம் என்ற காரத், இதுநாள் வரை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஆதரவளித்தோம் என்று விளக்கினார்.