நாடாளுமன்றத்தில் 22 ஆம் தேதி நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசைக் கவிழ்ப்பது குறித்து, அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இன்று சந்தித்துப் பேசினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பி. முதல்வருமான மாயாவதியை இன்று அவரின் இல்லத்தில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்கியதுடன், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்கடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளார்.
மத்திய அரசிற்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்ட பிறகு முதன்முறையாக இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்துள்ளது.
மக்களவையில் இடதுசாரிகளுக்கு 59 உறுப்பினர்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும் உள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் மத்திய அரசிற்கு எதிராக இணைந்து போராட வேண்டியது அவசியம் என்று பிரகாஷ் காரத் கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துடைய எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் தான் சந்தித்துப் பேச உள்ளதாக பிரகாஷ் காரத் அண்மையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.