நாடாளுமன்றத்தில் 22 ஆம் தேதி மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐ.மு.கூ.- இடதுசாரி உறவு முறிந்ததற்கான சூழலை விளக்கினார்.
கொல்கத்தாவில் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மத்திய அரசு தப்பிக்குமா இல்லையா என்பது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகுதான் தெரியவரும் என்று குறிப்பிட்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்ட பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்த ஜோதிபாசுவின் நிலைப்பாட்டை பாராட்ட வேண்டியது தனது தார்மீகக் கடமை என்றார்.
"ஐ.மு.கூட்டணிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்கியதில் ஜோதிபாசுவிற்கும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதனால் அந்தக் கூட்டணி முறிந்ததற்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து அவர்களிடம் விளக்குவது எனது கடமை.
நான் இரண்டு காரணங்களுக்காக ஜோதிபாசுவைச் சந்தித்தேன்- கூட்டணி முறிந்ததற்கான சூழ்நிலைகளை விளக்கினேன். அண்மையில் 95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜோதிபாசுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்" என்றார் அவர்.