இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் செய்துகொள்ளப்போகும் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை தடையின்றி பெறுவது தொடர்பான பாதுகாப்பு உள்ளது என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான ஒப்பந்த வரைவு தொடர்பாக பலத்த சந்தேகங்களும் சர்ச்சையும் எழுந்துள்ள நிலையில், டெல்லியில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அனில் ககோட்கர், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பின்படி, பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் நாம் கொண்டுவரவுள்ள நமது நாட்டு அணு மின் உலைகளுக்கும், அயல் நாடுகளில் இருந்து நாம் வாங்கி நிறுவி பயன்படுத்தவுள்ள அணு உலைகளுக்கும் தேவைப்படும் யுரேனியம் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவதைப் பொறுத்தே கண்காணிப்பும் தொடரும் என்று கூறினார்.
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் வழங்கப்படுவது பாதிக்கப்படாத வகையில் பல்வேறு பாதுகாப்புகள் (உறுதிகள்) ஒப்பந்த வரைவில் உள்ளதாகவும் அனில் ககோட்கர் தெரிவித்தார்.
தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேன்ன், இந்தியாவின் சார்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.பி. குரோவர், பாபா அணு சக்தி ஆய்வு மையத்தின் கே. இராமகுமார், அயலுறவு அமைச்சகத்தின் டி.பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோருடன் இணைந்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ககோட்கர், அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் நாம் வாங்கும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள், உதிரி பாகங்கள் என்று அனைத்தையும் உலைகளின் முழு ஆயுட்காலத்திற்கும் வழங்கும் உத்தரவாதத்தை ஒப்பந்தங்களின் மூலம் நம்மால் உறுதிசெய்துகொள்ள முடியும் என்றார்.
எரிபொருள் வழங்கலை எப்படி உறுதிசெய்வது என்பது குறித்து விளக்கிய குரோவர், அயல்நாடுகளில் இருந்து நாம் வாங்கும் அணு உலைகளுக்கான ஒப்பந்தத்திலேயே அதற்கான எரிபொருள் உறுதியும் சேர்ந்ததாகவே இருக்கும் என்றார்.
எரிபொருள் வழங்கல் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டால் பன்னாட்டு அணு சக்தி கண்காணிப்பிலிருந்து நமது அணு உலைகளை விலக்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டதற்கு, அப்படிப்பட்ட நிலை ஏற்படாது
என்றும், ஒருவேளை அந்தச் சூழல் ஏற்பட்டாலும் விதி 52சி அதற்கான சட்டப்பூர்வ வழிகளை அளிக்கிறது என்று குரோவர் பதிலளித்தார்.
இதையும் தாண்டி எரிபொருள் நிறுத்தப்பட்டால், அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பை விதி 29,30எஃப், 10,4 ஆகியன மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் முகவுரையும் உறுதி செய்கின்றன என்றும் குரோவர் கூறினார்.
“எரிபொருள் நிறுத்தம் திடீரென்று நிகழ்ந்துவிடாது, ஏனென்றால் அப்படிப்பட்ட நிலையை தவிர்க்கும் பல அடுக்கு பாதுகாப்புகள் இந்த ஒப்பந்த வரைவில் உள்ளன. எனவே மாற்று நடவடிக்கைகளுக்கான வாய்ப்பும், கால அவகாசமும் இருக்கும். அந்த மாற்று நடவடிக்கை எடுக்கும் காலகட்டத்திலும் அணு உலைகளை இயக்கக்கூடிய அளவிற்கு நம்மிடம் போதுமான எரிபொருள் இருப்பு இருக்கும். எரிபொருள் வழங்கல் தொடர்ந்து கிட்டவேண்டும் என்பதை உறுதிசெய்யவே தொடர் கண்காணிப்பு என்பதை நாம் ஏற்கின்றோம் என்பதை வலியுறுத்தி வந்துள்ளோம். இந்த உத்தரவாத்த்தை மீறும் நிலையில்தான் corrective measures என்று ஒப்பந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளும் உரிமை பயன்படுத்தப்படும்” என்று விளக்கிய அனில் ககோட்கர், மாற்று நடவடிக்கை உரிமை என்பது வரையறை செய்யப்படாத இறையாண்மை ரிதியிலான நடவடிக்கை உரிமையையே குறிக்கிறது என்று கூறினார்.
மாற்று நடவடிக்கைத் தொடர்பான குறிப்பு ஒப்பந்த வரைவின் முகவுரையில் மட்டுமே உள்ளதே தவிர, நடைமுறை விதிகளில் ஒன்றாகச் சேர்க்கப்படவில்லையே என்று வினவியதற்கு பதிலளித்த அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேன்ன், பன்னாட்டு அணு சக்தி முகமையின் வியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட உடன்படிக்கை விதி 31ன் படி, முகவுரையும் கண்காணிப்பு ஒப்பந்தத்தின் ஒரு அங்கமே என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கண்காணிப்பு ஒப்பந்த வரைவு எந்த விதத்திலும் நமது நாட்டை ஒரு அணு ஆயுத நாடாக ஏற்கவில்லையே என்று கேட்டதற்கு பதிலளித்த அனில் ககோட்கர், “நம்மை அணு ஆயுத நாடாக அங்கீரிக்குமாறு கோரி இந்த ஒப்பந்தத்தற்குச் செல்லவில்லை, மாறாக, சர்வதேச அளவில் அணு சக்தி ஒத்துழைப்பை பெறுவதற்காகவே செல்கிறோம். நாம் ஒரு அணு ஆயுத நாடு, இது நமக்கும் தெரியும் உலகத்திற்கும் தெரியும். அணு ஆயுத நாடா அல்லது அதனைப் பெற்றிராத நாடா என்பது அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பானது, அதில் நாம் ஒரு அங்கமல்ல. எனவே அதன் வரையறைகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையேதுமில்லை” என்று கூறினார்.
நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அணு சக்தித் திட்டம் பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பிலிருந்து முழுமையாக அப்பாற்பட்டது என்றும் ககோட்கர் கூறினார்.