இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரசுக்குத் தோல்விதான் கிடைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல் தடுப்பதற்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவை வெளியிட முடியாது என்று மறுத்து வந்த காங்கிரஸ் பின்னை அதை வெளியிட்டுள்ளது.
இதேபோல கடந்த 1991 இல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது, பன்னாட்டு செலாவணி நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். அந்த ஒப்பந்தத்திற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் வரைவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாஷிங்டனில் இருந்து பெற்று பிரசுரித்தது" என்று கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகளால் வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புவாத சக்திகளை வெளியேற்றுவதற்குத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளித்து வந்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் பா.ஜ.க.விடம் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதற்கு அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்றார் பிரகாஷ் காரத்.
அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு ஈரானை மிரட்டுவது போல இந்தியாவையும் அமெரிக்கா மிரட்டாது என்பது என்ன நிச்சயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.