கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் அணு உலைகளை பாகுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டு உள்ளதால், பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் ஏற்கத்தக்கது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
அணு தொழில்நுட்பங்களில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகள் கவலைப்படும் விடயமான ஹைட் சட்டம் பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் அணு உலைகளை பாதுகாப்புத் துறை சார்ந்தவை, மின் உற்பத்தி சார்ந்தவை எனப் பாகுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் மேற்கொள்ள உள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
"1974 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் நாம் நடத்தியுள்ள அணு குண்டு சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராகப் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு பொன்னான சலுகை.
அணு தொழில்நுட்பங்களில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலை முடிவடைய வேண்டும் என்றும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் வேண்டும் என்ற நேருவின் கனவு நிறைவேற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு அணு சக்தி பயன்படுத்தப்பட வேண்டும்." என்றார் சுவாமிநாதன்.
அணு சக்தி ஒப்பந்தம் பற்றி பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசுகையில், 1950 களில் இந்திய அணு திட்டங்களின் தந்தையான ஹோமி பாபாவுடன் ரேடியேசன் ஜெனிடிக்ஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதை 83 வயதாகும் எம்.எஸ். சுவாமிநாதன் நினைவு கூர்ந்தார்.