மக்களவை வருகிற 21 ஆம் தேதி திங்கட்கிழமை கூடுகிறது. இது ஐ.மு.கூ. ஆட்சி காலத்தில் நடக்கும் 14 ஆவது கூட்டமாகும்.
"அரசு சார்ந்த அலுவல்கள் காரணமாக அவசரமாகக் கூடும் அவையின் நடவடிக்கைகள் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முடிவுறும்" என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கியதை அடுத்து, சிறுபான்மை நிலையை அடைந்துள்ள மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் விடுத்துள்ள அழைப்பின் அடிப்படையில், அவசரமாகக் கூட்டப்படும் மக்களவையில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தால் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடருவோம் என்றும், ஆட்சியை இழந்தால் அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவோம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.